Friday 31 August 2018


குழந்தைப் பாடல்
             -கவிஞர் செல்வராஜா
இன்று
அதிகாலையில்
குழந்தைப் பாடலாக்கம் செய்யும்
தீராத தாகத்தோடு
பேனாவை
கையில் எடுத்தேன்.

எவ்வளவு முயற்சித்தும்
எனக்கான கவிதை
வந்தபாடில்லை.

யோசிக்கும் போது
நேற்றிரவு
சாப்பாட்டுத் தட்டில்
தண்ணீரை ஊற்றிய
எனது குழந்தையை
அடித்தது
கையை உறுத்தியது.

மன்னிப்பு கோறும்
பார்வையில்
எட்டிப் பார்த்தேன்.

கவிதையை
கையில் பிடித்தபடி
உறங்கிக் கொண்டிருந்தாள்
என் மகள்.



Wednesday 29 August 2018

நம்பிக்கை-கவிஞர் செல்வராஜா


நம்பிக்கை
                     -கவிஞர் செல்வராஜா

தோழன் என்றான்
தோள் கொடுத்தேன்
ஒருநாள்
வாள் கொண்டு 
என்னை அறுக்க வந்தான்

தம்பி என்றான்
நம்பி வைத்தேன்
பிரச்சனை வேடனின்
வம்பு வலையிட்டு
விலகிக் கொண்டான்

அண்ணா என்றான்
கண்ணாக நினைத்தேன்
முன்னால் செல்லவிட்டு
பின்னால் குத்தினான்

நண்பா என்றான்
அன்பால் அணைத்தேன்
துன்பம் வந்ததும்
தூரச் சென்றான்


ஒருநாள்...
பக்தா என்ற சத்தம்...
இறைவா என்றேன்
நீ முக்தி அடைந்து விட்டாய்
வந்து சேர் என்றார்.

Tuesday 28 August 2018

Kavignar selvaraja: முறைமை-கவிஞர் செல்வராஜா

Kavignar selvaraja: முறைமை-கவிஞர் செல்வராஜா: ஒவ்வொரு முறையும் மெளனத்தில் ஆரம்பித்து மெளனத்திலேயே முடித்து விடுகிறேன் எண்ணக் கடலின் ஆழத்தை எழுத்தாணி குச்சியினால் அளந்து காட...

முறைமை-கவிஞர் செல்வராஜா


ஒவ்வொரு முறையும்
மெளனத்தில் ஆரம்பித்து
மெளனத்திலேயே
முடித்து விடுகிறேன்

எண்ணக் கடலின்
ஆழத்தை
எழுத்தாணி குச்சியினால்
அளந்து
காட்டி இருக்கலாம்

விரல் சொடுக்கில்
வெளியேறும்
அலை செய்தியாவது
அனுப்பி இருக்கலாம்

இதழ் விரியும்
புன் சிரிப்பில்
இதயத்தை காணும்
அளவு கோலை
அறிந்தேனில்லை

இருப்பினும்
என் காதலை
எடு
த்தியம்பும் முறைமையில்
ஒவ்வொரு நாளும்
தவறவிடுவது

உனது எதிர்மறை பதிலை
எதிர்நோக்கும் சக்தி
என்னிடம்
இல்லை என்பதால்
மட்டுமே!...

Sunday 26 August 2018

கவிதை


இவனால் மட்டுமல்ல
                                           -கவிஞர் செல்வராஜா

இந்த இடம்
இல்லாவிட்டால்
இன்னொரு இடத்தில்
இந்தப்பூ....பூத்திருக்கும்

இந்த பாதை
இல்லாவிட்டால்
இன்னொரு பாதையில்
இந்த நதி
கடலை அடைந்திருக்கும்

இந்தக் காற்று
இல்லாவிட்டால்
இன்னொரு காற்று
புகுந்து
இந்தப் பலூனை
வானில் ஏவியிருக்கும்

இவனால்தான் எல்லாம்
இறுதி வடிவம் வேண்டாமே...
இந்த மனிதன் 
இல்லாவிட்டால்
இன்னொரு மனிதன்
இந்த சாதனையை
நிக்ழ்த்தாமலா போவான்?

Friday 24 August 2018

மெளன நாடகம்-கவிஞர் செல்வராஜா


மெளன நாடகம்
                                -கவிஞர் செல்வராஜா

உனது பார்வைப்பட்டதும்
மின்னலெனத் தாக்கப்படும்
இதயம்
ஒரு நிமிடம்
கனத்துப் போகிறது

தார்ச்சாலையில்
தாமரை மலர் விரிக்க
மென்பாதம் பதித்து
தேவதையாய்  நீ
நடந்து வருகிறாய்

பல ஆண்டுகளாய்
தவமிருந்த என்னில்
குறிஞ்சி மலர் மின்னலை
பீய்ச்சி அடிக்கிறாய்

இருந்தாலும்
உனது
சுவசக்காற்றின் வாசத்தால்தான்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
எனது உயிர்ப்பறவை

மொழிகளற்ற 
வெறுமையில் நடைபெறும்
இந்த
மெளன நாடகம்
வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருக்கிறது
பல ஆண்டுகளைத் தாண்டி.


மறுக்கப் பட்ட வரலாறு-கவிஞர் செல்வராஜா

மறுக்கப்பட்ட வரலாறு
                                                           -கவிஞர் செல்வராஜா

படை வீரர்களைப் போல்
வரிசை வரிசையாகத்தான் 
செல்கின்றன

இரை தேடும் முயற்சியே
இலக்காக நிர்ணயித்து
விரை வண்டியாய் ஓடுகின்றன

தங்களுக்கென்று
ஒரு கோட்டையும்
கட்டியாகி விட்டது

கோட்டையின்
கஜானாவை நிரப்பவே
காலம் முழுதும்
அலைந்தாயிற்று

எதிரி என்று தெரிந்தால்
அவ்வப்போது
கடித்துக் குதறவும்
தவறவில்லை

இறுதி காலம் வரை
ஓயாமல் உழைத்தும்
ராஜ்ய பரிபாலனத்தோடு
வாழ்ந்தும்
தனக்கென 
ஒரு வரலாறு
எழுதப்படாமலே
இறந்து போகும் எறும்புகள்.

Monday 20 August 2018

சிதை-கவிஞர் செல்வராஜா

சிதை
         - கவிஞர் செல்வராஜா

எல்லோரையும் பார்த்து
சிதை கேட்டுக் கொண்டது.
இந்த முகத்தை
இப்போதே பார்த்துக் கொள்ளுங்கள்...
இன்னும் 
கொஞ்ச நேரத்தில்
நான்
எரிக்கப்  போகிறேன்....

இந்த முகம்
புன்முறுவல் காட்டியே
பல பெண்களை
சீரழித்த முகமாக கூட
இருக்கலாம்.

உள்ளொன்று வைத்து
வெளியொன்று பேசும்
முகமூடி தரித்த
முகமாக கூட
இருக்கலாம்.

விழி கனிவு
மொழிகாதல்
நெஞ்சில் வஞ்சம்
வைத்து
வஞ்சிகளை
வலை வீசிய
வண்ண முகமாகவும் 
இருக்கலாம்

எது எப்படியோ
பலரை  ஏமாற்றிய
இந்த முகம்
இன்னும் சில மணித்துளிகளில்
சிதிலமடையப் போகிறது.

எனது
கனல் கக்கும் 
கரங்களால்
சாம்பலாகப் போகும்
இந்த முகத்தை
கடைசியாக ஒரு முறை
பார்த்துக் கொள்ளுங்களேன்...!

Sunday 19 August 2018

கண்ணீர் ஆறு-கவிஞர் செல்வராஜா


கண்ணீர் ஆறு
            -கவிஞர் செல்வராஜா

இது
என்ன கொடுமை?
கடவுளின் தேசம்
கேரளாவில்
சாத்தான்
குடிபுகுந்து விட்டதோ?

சுனாமியாய்
வந்து
நாட்டு மக்களை
நாசமாக்கியது போதாதென்று
இப்போது
வெள்ளக்காடாய் வந்து
கேரள மக்களை
கண்ணீர் தேசத்தில்
கதற வைக்கிறதோ…

நீருக்காய்
நாம்
போராடிக் கொன்டிருக்கிறோம்.
நீரே
நம்மிடம்
போராடினல்  எப்படி?

வீதிகளில்
பாலாரும் தேனாரும்
ஓடும்
என்ற கனவில்
இருந்த
நமக்கு…இப்போது
நனவில்
காட்டாறு ஓடினால்?...

ஓ…நீரே
நீ…
ஆறாய்  ஓடி
பேறு எடுக்கப் பாரு..
எம்மக்களின் வாழ்வை
இனியும்
போடதே  கூறு.

ஓ…வெள்ள ஆறே
கேரள மக்களின்
கண்ணீர் ஆற்றைப்
பார்த்தாவது..உன்
வேகத்தை கட்டுப்படுத்து.
அவர்களின்
உள்ளங்களில்
மகிழ்ச்சி  ஆறாய்
மாறப் பார்.         


Thursday 16 August 2018

நீ என்ன செய்தாய்? -கவிஞர் செல்வராஜா




மலரின் வாழ்க்கை
உதிரும் வரை
இருந்தும் பூமியில்
அதன் வாசத்தை
வழங்கிச் செல்கிறது.

திரியின் வாழ்க்கை
எரியும் வரை
இருந்தும் ஒளியை
அளித்துச் செல்கிறது.

பயிரின் வாழ்க்கை
மூன்று மாதம்
இருந்தும் அரிசியை
பரிசாகத் தருகிறது.

மனிதா!
உனது வாழ்க்கை
எத்தனை ஆண்டுகள்?
எதை
கொடுத்துவிட்டு
செல்கிறாய்….?
பிறருக்காய்….!

திரை உலகம்-கவிஞர் செல்வராஜா


திரை உலகம்
           -கவிஞர் செல்வராஜா

இங்கே கனவுகள்
காசாக்கப்படுகின்றன…

நிஜமுகத்தை விட
ஒப்பனை முகத்திற்குத்தான்
இங்கு மவுசு அதிகம்.

இங்குதான்
நாத்திக நடிகர் கூட
தனது
அபிமான ரசிகர்களுக்கு
கடவுளாக தென்படுகிறார்.

ராஜா வேடத்திற்காக
அரிதாரம் பூசியவரே
அரியணை ஏறும்
அதிசயத்தை
இங்குதான் பார்க்கிறோம்..

கற்பனை
கோட்டையோடு
வந்தவர்கள்
தனது
வாழ்க்கையை
கோட்டை விட்டவர்களும்
உண்டு
கோட்டையைப் பிடித்தவரும்
உண்டு..

எது எப்படியோ
கோடிக்கணக்கில் புரளும்
இந்த தொழிலை
வாழ வைக்கும்
பெருமை
தெருக்கோடியில் உள்ள
குடிசை வீட்டு
குப்பனுக்கும் உண்டு…


ஏக்கம்-கவிஞர் செல்வராஜா


ஏக்கம்
         -கவிஞர் செல்வராஜா

புவியீர்ப்பை விஞ்சிய
உமது
விழி ஈர்ப்பால்
நித்தமும்
வானில் மிதக்கிறது
என் உடல்.

கரை தாவும் அலையென
நினைவலைகளை
சுமந்த படி
நிலையின்றி தவிக்கிறது
எனது மனம்.

வல்லூறுகளென தென்படும்
வலிபக் கண்களுக்கு
தடையாக
இருக்க துடிக்கும்
என் கரங்கள்.

அன்புக்கடல் மூழ்கி
அரிதான பொருள் கொண்டு
விலையில்லா கூடமைக்கும்
இலைபின்னும்
குருவியாய்  நான்.

கூடு விட்டு கூடு
போவதற்குள்
நீ
வீடு வந்து சேரும் நாளுக்காய்
ஏங்கித் தவிக்கிறது
என்  இதயம்.



Wednesday 15 August 2018

இன்னொரு சுதந்திரம் -கவிஞர் செல்வராஜா


இன்னொரு சுதந்திரம்
                   -கவிஞர் செல்வராஜா

வெள்ளையர்களிடமிருந்து
பெற்ற சுதந்திரம்
இன்று
கொள்ளையர்களிடம்..

ஜனநாயகத் தோட்டம்
மலர வேண்டிய இடத்தில்
இன்று
பணநாயக முட்கள்.

வாக்கு வாங்கியவன்
கோடியில் புரளுகிகிறான்
வாக்கு அளித்தவனோ
தெருக்கோடியில்
உருளுகிறான்.

ஒட்டு வங்கியைப் பெற்றவன்
சுவிஸ் வங்கியை
நிரப்புகிறான்.
ஓட்டு போட்ட ஏழையோ
வங்கி கடனை
கட்ட முடியாமல்
திணருகிறான்.

ஐந்தாண்டு கால
ஆட்சியை
ஐந்து ரூபாய் நோட்டுக்கு
விலைக்கு விற்று
அடிமைப் பட்டு கிடக்கும்
இந்தியாவை விடுவிக்க
இன்னொரு சுதந்திரம்
வாங்கியாக வேண்டும்.



நம்மால் முடியும்-கவிஞர் செல்வராஜா


நம்மால் முடியும்
               -கவிஞர் செல்வராஜா

எச்சிலை நம்பியே
தனக்கான
வீடமைத்துக் கொள்ளும்
சிலந்தி.

தூரம் பாராது
தீராத தாகத்தோடு
கடலடையும் பயணத்தை
தொடரும் நதி.

துளிர் விடுவோமென்ற
நம்பிக்கை யோடே
ஒற்றைக் காலில்
தவமிருக்கும்
ஒவ்வொரு பட்டமரமும்

முடியும் என்ற
நம்பிக்கையாலே
தன்னை விட
பல மடங்கு உணவை
இழுத்துச் செல்லும்
எறும்பும்.

குறையுள்ள
உயிரினங்களெல்லாம்
முடியாததை
முடிக்கும் போது
நிறைவுள்ள
மனிதர்கள் நாம்
மூலையில் முடங்கலாமா?

அதனால்
முயற்சி நானேற்றுவோம்
குறி அம்பை எய்துவோம்
வெற்றிக் கனியை
தட்டிப் பறிப்போம்
முடியும்….
நம்மால் முடியும்.  


Sunday 12 August 2018

பின் தொடரும் மங்கை-கவிஞர் செல்வராஜா

பின் தொடரும் மங்கை
                                             -கவிஞர் செல்வராஜா

பத்து மாதத்திற்குள்ளாகவே
நான்...
பூமியில் ஜனித்ததாய் 
என் தாய்
எப்போதும் சொல்வாள்.

மழலைத் தமிழ்பேசி
மகிழ்விப்பதில்
அண்ணனை
முந்தி விட்டதாய்
அக மகிழ்ந்தார் அப்பா.

மூன்றாம் வகுப்பில்
நடந்த 
ஓட்டப் பந்தயத்தில்
முன் சென்ற பையனை
முந்தி
பரிசை தட்டிச் சென்றதை
கூறி மகிழ்ந்தார் ஆசிரியர்.

கூடப்படித்த
விடலைப் பசங்கள்
எல்லோரும்
வயதிற்கு வந்ததின்
வகையறியா தருணத்தில்
வயதிற்கு வந்ததை
முதலில் ஊர் கூட்டி
விழ எடுத்து
பறைசாற்றியது நான்தான்

இப்படி
இதுவரை
எல்லாவற்றிலும்
வாழ்க்கைப் போட்டியில்
வாலிபர்களை வீழ்த்தி
வாகை சூடிய நான்
முதன் முதலாய்
ஒருவனின்
பின்னால் போகிறேன்
கல்யாண கோலத்தில்
மணவறையை சுற்றும் போது...

Friday 10 August 2018

நூலகம் -கவிஞர் செல்வராஜா

நூலகம்
                    -கவிஞர் செல்வராஜா

நூலகம் வந்தால்
பேசக்கூடாது என்பார்கள்
நூலகமே  பேசினால்...
ஒரு சின்ன கற்பனை.

நான் நூலகம் பேசுகிறேன்
வாசகர்களே இங்கு வாருங்கள்.
நம்முடைய 
உரையாடல்கள்
மெளனமாகவே  இருக்கட்டும்.

என்னிடம்
வரலாற்றையேப்
புரட்டிப்போடும்
வீரக்கதைகள்
ஏராளம் உண்டு.

உங்களின்
உள்ளக் காயங்களை
மெல்ல ஆற்றும்
நல்ல கவிமருந்துகளும்
ஏராளம் உண்டு.


நான் ஒரு நல்ல ஆசிரியன்.
என்னிடம் பயின்றவர்கள்
சோடை போனதே இல்லை.

மேடை பேச்சுக்கு
ஆடை கட்டிய
அறிஞர் அண்ணா
கல்லூரிகளில்
கற்றதை விட
என்னிடம் பெற்றவை 
ஏராளம்.

எட்டாவது பிள்ளையாய்ப்
பிறந்து
இந்திய அரசியலின்
சட்டத்தையே மாற்றி
எட்டாப் புகழை எட்டிய
அண்ணல் அம்பேத்கார்
அதிகம் படித்த நாட்கள்
என்னிடம் மட்டுமே.

நீங்கள்
வெறுமனே
தொலைக்காட்சியைப் பார்த்து
உங்கள் வாழ்வை
தொலைக்கப் பார்க்காதீர்கள்.
அருமையான 
நூல்களைப் படித்து
அறிஞராகப் பாருங்கள்.

நானோர்
எடுப்பார் கைப்பிள்ளை.
என்னைப் படிப்போரின்
அறிவுக்கு இல்லை எல்லை.

என்னிடத்தில் உள்ள
புத்தகத்தைப் படியுங்கள்.
நீங்கள்
புத்தன் ஆகிறீர்களோ...இல்லையோ
கண்டிப்பாக
உத்தமன் ஆவீர்கள்.

வாழ்வின்
கலங்கரை விளக்கும் நானே.
உன்னிடத்தில்
களங்கம் இருக்கிறதா...
என்னிடத்தி வாரும்
விலகும் உன் களங்கம்.

உன்னிடத்தில்
அறிவுக்குறை இருக்கிறதா
என்னிடத்தே  வாரும்
உமது குறையை நிறைவாக்கி
கரையேற்றுவேன்.

இறுதியாக ஒரு வேண்டுகோள்
கல்லாமை இருளைப் போக்கும்
விளக்கும் நானே..
விளக்கமும் நானே.

எல்லோரும்
என்னிடம் வாருங்கள்.
வந்து
நூல்களை வாசியுங்கள்.
அறிவை  சுவாசியுங்கள்
அதற்கு
இனிமேலாவது யோசியுங்கள். 
  



ஊதித்தள்ளுவோம் ஊழலை -கவிஞர் செல்வராஜா

ஊதித்தள்ளுவோம் ஊழலை
                                                                            -கவிஞர் செல்வராஜா

எதையும் எதிர்பார்க்காமல்
கனி கொடுக்கும்  மரம்.
எதையாவது எதிர் பார்த்து
பணி புரிவான் மனிதன் .

காற்றிடம் 
இலஞ்சம் பெற்றா
மலர் தன் 
வாசனையை வீசுகிறது?
காசு கொடுத்தால்தான்
உயிர் மூச்சாவேன்
என்று
காற்று அடம் பிடித்தால்
நமது பாடு?....

எந்த
கையூட்டு எதிர் பார்த்து
கதிரவன்
ஒளிதருகிறான்

வீட்டிற்கு
ஒளியூட்டும்
மின்சாரத்திற்கு
கட்டணம் வாங்கும் மனிதனிடம்
இரவில்
இந்த உலகிற்கே
ஒளியூட்டும் குளிர் நிலவு
கட்டணம் கேட்டால்...

மனிதா
கைநாட்டு வைப்பதற்கே
உனக்கு மட்டும்தான்
கையூட்டு
தரவேண்டியுள்ளது

சம்பளத்தை
மறந்து விட்டு
கிம்பளத்தை எதிர்பார்த்தே
வேலை செய்கிறாய்...

இலஞ்சம் கொடுப்பது
கோழைத்தனமென்று  தெரியவில்லை....
இலஞ்சம் வாங்குவது
பிச்சையென்று உனக்குப் புரியவில்லை

கோடி கோடியாய்
ஊழல் செய்வோர்க்கு
ஒரு வேண்டுகோள்...
நீ...இறந்த பின்
கோடித்துணியாவது
உனக்கு மிஞ்சுமா?..

ஊழல் பெருச்சாளிகள்
உலா  வரும் வரை
நன்மை விளைச்சல்
எப்படி நடக்கும்?...

அதனால்...
ஒரு சூள் கொள்ளுவோம்.
ஊதித்தள்ளுவோம்...ஊழலை.
உயர்த்திக் காட்டுவோம்
மக்கள் வாழ்வினை.
                                         

Wednesday 8 August 2018

கலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி-கவிஞர் செல்வராஜா

கலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி
                                                             -கவிஞர் செல்வராஜா


தமிழ்க் கடலின்
அலை
இங்கே
ஓய்ந்து கிடக்கிறது

முத்தமிழின்
சங்கமம்
இங்கே
முடங்கி கிடக்கிறது

எந்த சக்தியாலும்
அழிக்க முடியாத
பராசக்தி
இங்கே
பாராமுகமாய்
இருப்பதென்ன?

முப்பாலையும்
கடைந்து
குறளோவியம்
என்னும்
அமிர்தத்தை தந்த
முத்தமிழே
எங்களை விட்டு
அப்பால் சென்றனையோ?

நீதான் உண்மையான
போராளி.
இறுதி வரை
மக்களுக்காக
போராடினாய்
இறுதி மூச்சு விட்டும்
போராடி வெற்றி கண்டாய்.
மெரினாவில்
அண்ணாவில் அருகில்
இருக்கும் பாக்கியம்
கொண்டாய்

அய்ந்து முறை
அரியனை ஏறிய
அஞ்சுகப் புதல்வன் நீ...
மக்களின் மனதில்
நீங்காத இடம் பெற்ற
அற்புத முதல்வன்  நீ

ஓயாத உழைத்த சூரியனே
புகழ் வானின் தேயாத நிலவே
வங்கக் கடற்கரையில்
உறங்க நீ சென்றாலும்
எங்கள் இதயத்தில்
உறங்காது
உம்  நினைவுகள் .